சென்னையில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது கட்டாய நன்கொடை வசூலிப்பதை கட்டுப்படுத்த விதிமுறைகள் இல்லையா என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பத்திரக்கையாளர் பாவேந்தன், சென்னை உயர் நீதிமனறத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், சென்னையில் உள்ள 15க்கும் மேற்பட்ட தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் குழந்தைகளை சேர்க்க நன்கொடை வசூலிக்கிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யா, நீதிபதி தனபால ஆகியோர், "அரசிடம் சலுகையைப் பெற்றுக் கொண்டே தனியார் பள்ளிகளில், பணம் படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு இடம் வழங்கப்படுகிறது. சமுதாயத்தில் பின்தங்கிய மக்களை பற்றி இவர்கள் நினைப்பதே இல்லை. கல்வியை வியாபாரமாக்கி உள்ளனர். எனவே நர்சரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை கட்டுப்படுத்த விதிமுறைகள் உள்ளதா? இல்லையா? என்பதை தமிழக அரசு வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.