நாடு முழுவதும் 1.79 லட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்கவும், 11,188 புதிய பள்ளிக்கூடங்கள் கட்டவும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உயர்நிலை கல்வி வசதியை அதிகரிப்பதற்காக 11 மற்றும் 12-வது ஐந்தாண்டு திட்டங்களில் ரூ.20,120 கோடியிலான "ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்சா அபியான்" திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 11,188 புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்படுகிறது. 1.79 லட்சம் ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள்.
இதற்கான செலவில் 11-வது திட்டக் காலத்தில் மத்திய அரசின் பங்கு 75 விழுக்காடு, மாநில அரசின் பங்கு 25 விழுக்காடு என்ற விகிதத்தில் இருக்கும். 12வது திட்ட காலத்தில் திட்டச் செலவு சரிபாதியாக பகிர்ந்து கொள்ளப்படும்.
2005-06ஆம் ஆண்டில் 9, 10 வகுப்பில் மாணவர்களின் வருகைப் பதிவு 56.26 விழுக்காடாக உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இதை 75 விழுக்காடாக உயர்த்தி உயர்நிலை கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.