தூத்துக்குடியில் நாளை மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (16:57 IST)
கடல்வாழ் உயிரியல் படிப்பு, ஆராய்ச்சியில் ஈடுபடும் முது அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நாளை தூத்துக்குடியில் நடைபெறுகிறது என்று மத்திய கடல்வள ஆராய்ச்சி மைய தலைமை ஆராய்ச்சியாளர் வி.கிர்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய கடல் உயிரியல் கழகம், மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமும் இணைந்து கடல்வாழ் உயிரியல் படிப்பு, ஆராய்ச்சியில் ஈடுபடும் முது அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை நாளை (புதன்கிழமை) காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடத்துகிறது.
மாணவர்களின் கடல் உயிரியல் மீன் வளம், கடல் வாழ் உயிரின வளர்ப்பு சம்பந்தமான அறிவை நிரூபிப்பதற்கும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் இந்த வினாடி வினா நடத்தப்படுகிறது.
போட்டியில் சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நிறைவு விழாவில் மீன்வளக் கல்லூரி முதல்வர் வை.கி.வெங்கடரமணி, இந்திய கடல் உயிரியல் கழக செயலாளர் கே.எஸ்.முகமது ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிபெறும் அணிக்கு சுழற்கோப்பையும், சான்றிதழ்களும் வழங்குகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.