நாடாளுமன்ற தேர்தல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் எண்ணம் இல்லை என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தேர்தல் காரணமாக தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் எண்ணம் இல்லை. வழக்கம் போல தேர்வுகளை மார்ச் மாதம் முதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட வில்லை என்றார்.
ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். அதற்கு முன்னதாக இந்த மாத இறுதியில் உத்தேச கால அட்டவணை தயார் செய்யப்பட்டு அது அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்படும். அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகு சரியான கால அட்டவணை வெளியிடப்படும்.
மாணவர்கள் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதை தவிர்க்க, முதல் முதலாக 8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு மாணவ, மாணவிகளின் புகைப்படம் கணினியில் பதிவு செய்யப்பட்டு அதில் இருந்து காப்பி எடுத்து அதை மாணவர்களுக்கு வினியோகித்து தேர்வு நடத்தும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று வசந்தி ஜீவானந்தம் கூறினார்.