சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரிக்கு தேசிய விருது!
சனி, 13 டிசம்பர் 2008 (13:00 IST)
2008ஆம் ஆண்டு "பொறியியல் கல்லூரிக்கான தேசிய விருதை" சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி வென்றுள்ளது.
தொழில்நுட்ப கல்விக்கான இந்திய சங்கத்தின் (ISTE) அங்கீகாரம் பெற்ற இந்த விருது, வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை புவனேஸ்வரில் நடைபெற உள்ள அச்சங்கத்தின் 38-வது தேசிய மாநாட்டில் வழங்கப்பட இருக்கிறது.
இத்தகவலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி நிறுவனத் தலைவர் ஆர்.எஸ். முனிரத்னம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான இந்த விருதைப் பெற, நாடு முழுவதும் உள்ள 4,000 பொறியியல் கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இதில் 38 கல்லூரிகளின் மனு நிராகரிக்கப்பட்டு, அனைத்து தகுதிகளும் பெற்ற ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி தேசிய விருதை வென்றது என்றும் அவர் கூறினார்.
இந்த விருதானது, கல்வி போதிக்கும் முறைகள், வேலைவாய்ப்புக்கான பயிற்சி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல, உயர்ந்த கட்டமைப்பு, தூய்மை மற்றும் பசுமையான சுற்றுச்சூழல், மாணவர்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது.