சர்வதேசப் போட்டியில் வெல்பவர்களுக்கு முதல் பரிசு தங்கம் உள்பட பல்வேறு பரிசுகள் கொண்ட, மதுரையில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கு டிசம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலக அஞ்சல் சங்கத்தின் 38-வது கடிதம் எழுதும் போட்டி இந்திய அஞ்சல் துறை சார்பில் வருகிற ஜனவரி 4ஆம் தேதி நடக்கிறது.
இப்போட்டிக்கு "நேர்த்தியான வேலை சூழ்நிலைகள் சிறந்த வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பதை விளக்கி ஒருவருக்கு கடிதம் எழுது" என்று தலைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கடிதம் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆங்கிலம், தமிழ் அல்லது ஏதாவது ஒரு பிராந்திய மொழியில் இருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் 31-3-2009 அன்று 15 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வயதுக்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விளக்கம் தலைமை தபால் நிலையங்களில் இலவசமாக கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் 2 பிரதிகள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் 3 பிரதிகள் ஆகியவற்றை வருகிற 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டிக்கு விண்ணப்பித்தவர்கள் போட்டி நாளன்று மதுரைக்கு தங்களது சொந்த செலவில் சென்று பங்கேற்க வேண்டும். போட்டிகள் முதலில் மண்டலம், பிறகு மாநில அளவில், அதன்பிறகு தேசிய அளவில், தொடர்ந்து சர்வதேச அளவில் நடைபெறும்.
தேசிய அளவில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முறையே ரூ.2,500, ரூ.1,500, ரூ.1,000 ரொக்கப்பரிசும், சான்றிதழம் வழங்கப்படும். சர்வதேச போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசாக தங்கப்பதக்கமும், 2-வது பரிசாக வெள்ளிப் பதக்கமும் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.