பொ‌றி‌யி‌யல் மாணவர்கள் கல்லூரி விட்டு கல்லூரி மாற விதிமுறைகள் அறிவிப்பு!

வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:59 IST)
பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ல் படி‌க்கு‌ம் மாணவர்கள் ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு மாறுவதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கே.கணேசன் வெளியிட்டுள்ள உத்தரவில், "தமிழக அரசு நடத்திய கல‌ந்தா‌ய்வு மூலம் பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் பாடப்பிரிவை மாற்ற முடியாது. இந்த ஆண்டிலிருந்து இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும். ஓராண்டு படிப்பை முடித்த மாணவர்களே கல்லூரி மாறுவதற்கு தகுதியுடயவராவர்.

இதற்கான நெறிமுறைகள் விவரம் வருமாறு:

அரசு பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிக்கு இட‌ம் மாறிக்கொள்ளலாம். சேர விரும்பும் கல்லூரியில் குறிப்பிட்ட பாடப்பிரிவில் காலி இடம் இருக்க வேண்டியது அவசியம். இதேபோல் சுயநிதி கல்லூரிக‌ளி‌ல் படிக்கும் மாணவர்கள் வேறு சுயநிதி கல்லூரிக்கு மாறிக்கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழக பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளில் (உறுப்பு கல்லூரிகள்) படிக்கும் மாணவர்கள் இதர இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரிக்கும், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிக்கும் மாறுதல் பெறலாம். மாணவர்கள் படிக்கும் பாடப்பிரிவுக்குத்தான் மாற்றம் வழங்கப்படும். மேலும் மாற்றம் கோரும் கல்லூரியில் அதே பாடப்பிரிவில் காலி இடம் இருக்க வேண்டும்.

கல்லூரி இடமாற்றம் 3, 5, 7-வது செமஸ்டர்களில் மட்டுமே அதாவது கல்வி ஆண்டின் தொடக்கத்தில்தான் வழங்கப்படும். கல்லூரி மாற்றம் கோரும் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட இரண்டு கல்லூரி முதல்வர்களிடமிருந்தும் ஒப்புதலை பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்லூரி மாற்ற உத்தரவு வரும் வரை தொடர்ந்து தற்போதைய கல்லூரியிலேயே படிப்பை‌த் தொடர வேண்டும்.

ஒரு பல்கலைக்கழக கல்லூரியில் இருந்து மற்றொரு பல்கலைக்கழக கல்லூரிக்கு மாற விரும்புவோர் முந்தைய செமஸ்டர் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 மற்றும் 7-வது செமஸ்டரில் மாற விரும்பினால், சேர விரும்பும் கல்லூரியின் பல்கலைக்கழகத்திடமிருந்து தடையின்மை சான்று (என்.ஓ.சி.) பெற வேண்டும். தன்னாட்சி பெற்ற கல்லூரிக்கு மாறும்போதும் இதே விதிமுறை கடைப்பிடிக்கப்படும்.

மேற்கண்ட விதிமுறைகள், மறுசேர்க்கையுடன் கூடிய கல்லூரி மாற்றத்திற்கும் பொருந்தும். இந்த புதிய இடமாற்றல் முறையின் கீழ், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் அரசு கல்லூரிக்கோ, உதவி பெறும் கல்லூரிக்கோ, சுயநிதி பொ‌றி‌யிய‌ல் கல்லூரிக்கோ மாற முடியாது. மேலும், பகுதி நேரமாக பி.இ., பி.டெக். படிக்கும் மாணவர்களும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக். எம்.எஸ்சி., பி.எஸ்சி., படிக்கும் மாணவர்களும் வேறு கல்லூரிக்கு மாற இயலாது" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்