மாணவ மாணவியர் கல்விக் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை, வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்ட மாணவ, மாணவியர் கல்விக் கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில், வங்கிகளால் சிறப்பு கல்விக் கடன் முகாம் நடத்தப்பட இருக்கிறது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் கல்வி, கலை- அறிவியல், பட்டயப் படிப்புகள் பயிலும் மாணவ மாணவியர் கல்விக் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தை (ஊராட்சி ஒன்றிய அலுவலகம்) அணுகி விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்களைப் பற்றிய விவரம், கல்லூரியில் சேர்ந்த விவரம், கட்டணம், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள், வரும் 14ஆம் தேதி வரை கிடைக்கும். விண்ணப்பங்களைப் பெற 14ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.