நவ.30-க்குள் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மிதிவண்டிகள்!
வியாழன், 6 நவம்பர் 2008 (10:26 IST)
நவம்பர் இறுதிக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் 2,38,900 மாணவர்கள், 2,83,750 மாணவிகள் ஆக மொத்தம் 5,22,650 பேர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக, கொள்முதல் செய்ய 19.6.2008இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மிதிவண்டிகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
2007-08ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் மீண்டும் சிறப்புத் தேர்வு மூலம் பிளஸ் 1 வகுப்புகளில் சேர்க்கப்படுவதால், கூடுதலாகத் தேவைப்படும் மிதிவண்டிகளை வாங்குவதற்கான கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில், பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன் முடிவில், நவம்பர் 2008 இறுதிக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கி முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.