பி.எட். பயிற்சி அளிக்க கல்வி நிறுவனம் தேர்வு : விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்!
செவ்வாய், 4 நவம்பர் 2008 (10:42 IST)
இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) பயிற்சி அளிக்க தகுதியுள்ள பயிற்சி நிறுவனங்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜே.சிரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தினை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், மற்றும் மகளிருக்கு பி.எட். ஒரு வருட கால பட்டப்படிப்பு பயிற்சி அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இவர்களுக்கு,அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக சிறந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
எனவே தகுதியுள்ள பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி அளிக்க இட வசதி, ஆசிரியர்களின் தகுதி விவரங்கள், தளவாடச் சாமான்கள், காலியிட எண்ணிக்கை மற்றும் அங்கீகாரம் பெற்ற உத்தரவின் நகல் ஆகிய பயிற்சி நிறுவனத்தின் தகுதியான அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளருக்கு நாளைக்குள் (புதன்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.