கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சால்வைகள், நினைவுப் பரிசுகள் வழங்ககூடாது என்று தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் அறிவித்துள்ளது
இது குறித்து அம்மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான விதிமுறைகளை வகுக்க கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தலைமையில் ஒரு குழுவை மாநில உயர்கல்வி மன்றம் அமைத்தது என்றார்.
இந்த குழுவால் உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன்படிதான் இனி பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பட்டமளிப்பு விழா மேடையில் அந்தந்த கல்லூரியின் முதல்வர், செயலர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, துறைத் தலைவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி அறக்கட்டளையின் செயலர், சிறப்பு விருந்தினர் ஆகியோர் மட்டுமே அமர வேண்டும் என்றார்.
மேடையில் வைக்கப்படும் பேனரில் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பெயர், பட்டமளிப்பு நடக்கும் இடம், தேதி மட்டுமே இடம் பெற வேண்டும் என்று கூறிய அவர், விழாவில் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கவேண்டும் என்றும் மற்றபடி வேறு யாருக்கும் மாலைகள், சால்வைகள், நினைவுப் பரிசுகள் உள்ளிட்ட எதுவும் வழங்கக் கூடாது என்றார்.
விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பதிவு செய்யப்பட்டு ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கூறிய அவர், பட்டமளிப்பு விழாவில் இசைப்பதற்கான இசையை சி.டி.யாக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு வழங்க உள்ளதாகவும் அதனை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதுதவிர, வேறு இசைகளையோ, பாடல்களையோ இசைக்கக் கூடாது என்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்றும் குத்துவிளக்கேற்ற கூடாது என்றும் கூறிய அவர், பட்டமளிப்பு விழா என்பது ஒரு புனிதமான சடங்காகும் என்றார்.
பட்டமளிப்பு விழாக்கள் வரும் கல்வி ஆண்டு முதல் இந்த விதிமுறைகளின்படி தான் நடைபெறும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உயர் கல்வி மன்றத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இதனை அங்கு கட்டாயப்படுத்த முடியாது. ஆனாலும் இந்த விதிமுறைகளை அவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ராமசாமி கூறினார்.