சிறுபான்மையினருக்கு அரசு நிதியுதவியுடன் கணினி பயிற்சி!
சனி, 18 அக்டோபர் 2008 (11:55 IST)
தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் சிறுபான்மை இளைஞர்களுக்கு அரசு நிதியுதவியுடன், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் படித்துவிட்டு, வேலை இல்லாமல் இருக்கும் கிறித்துவ, முஸ்லிம், சீக்கியம், புத்த மற்றும் பார்சீய மதத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், அரசு நிதியுதவியோடு ‘ஹார்டுவேர் நெட்வொர்க்கிங், சி., சி++, டேலி வித் எம். எஸ்.ஆபிஸ், டி.டி.பி. ஆகியவற்றில் கணினி திறன் வளர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை நீங்கலாக, மற்ற மாவட்டங்களில் உள்ள பயிற்சி நிலையங்கள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படும்.
இதில் சேர 10ஆம் வகுப்பு (தேர்ச்சி அல்லது தோல்வி), பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் ஒரு வெள்ளைத் தாளில் எந்த பயிற்சியில் சேர வேண்டும் என்பதை குறிப்பிட்டு, ஜாதி சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (இதற்கு மேல் கல்வித் தகுதி இருந்தால் அவற்றின் மதிப்பெண் சான்றிதழ்), வருமான வரி சான்றிதழ், பள்ளி /கல்லூரி மாற்று சான்றிதழ் ஆகியவற்றின் நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை 'மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எண். 807, அண்ணா சாலை, 5-வது தளம், சென்னை -2' என்ற முகவரிக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.