ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனத்தின் மூலம் இந்து ஆதிதிராவிடர், பழங்குடியினா, மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் பயன்பெறும் வகையில் 2008-09ஆம் ஆண்டிற்கான இலவச பயிற்சிகள் வழங்கும் தொழிற்பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பயிற்சிக்கு மத்திய, மாநில அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அங்கீகாரம் பெற்றவையாக இருத்தல் வேண்டும்.
விஷுவல் மீடியா பயிற்சிக்கு 50 மாணவர்களுக்கு 12 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி 30 மாணவர்களுக்கு 3 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சிகளுக்கு மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தாட்கோ, மாவட்ட மேலாளர் என்ற முகவரிக்கு விண்ணப் பிக்கவும். விண்ணப்பம் வருகிற 17ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.