சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கு நாளை சிறப்பு கலந்தாய்வு!
திங்கள், 13 அக்டோபர் 2008 (10:56 IST)
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சித்தா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நாளை சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், ஒற்றைச் சாளர முதலாம் கலந்தாய்வு மற்றும் மறுசுழற்சி கலந்தாய்விற்கு பிறகு ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான பகிரங்க கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில்உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வு குழு அலுவலகத்தில் வரும் 14ஆம் தேதி நடைபெறும்.
பகிரங்க கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர் கீழ்கண்ட தகுதிகளையுடையவராக இருத்தல் அவசியம்:
விண்ணப்பதாரர் 31.12.2008 அன்று 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் உயர்நிலை தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்து முதல் முறையில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பிற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வருமாறு: இதர பிரிவினர் 50% பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர்(முஸ்லீம்), பிற்பட்ட வகுப்பினர் (கிறிஸ்தவர்), 45% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40% மற்றும் பழங்குடி இனத்தவர் மற்றும் பழங்குடி வகுப்பினர் 35 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட இணைப்புகளுடன் கூடிய விண்ணப்பங்களை நாளை மாலை 3 மணிக்குள்ளாக சமர்ப்பித்தல் வேண்டும்.
பட்டபடிப்பில் யுனானி படிப்பதற்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் கிடையாது. ஆனால் உருது, அராபிக், பெரிசியன் எவையேனும் ஒரு மொழியில் ( எழுத மற்றும் படிக்க கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்) தகுதிப் பெற்றிருத்தல் வேண்டும்.
பகிரங்க கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தமது அசல் சான்றிதழ்கள், உண்மை சான்றுகளுடன் (bonafide) பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அக்டோபர் 11ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு பின்னரோ இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை என்ற முகவரியில் பெறப்பட்ட ரூ.500 மதிப்புள்ள சென்னையில் மாற்றத்தக்க இரண்டு வரைவோலைகள் (அவைகள் முறையே விண்ணப்பம் மற்றும் கலந்தாய்விற்கான கட்டணமாகும்.) ஒன்றினை தேர்வுக்குழு அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர் ரூ.5000-க்கான வங்கி வரைவோலையை (D.D.)சமர்ப்பிக்க வேண்டும். பழங்குடி இனத்தவர் மற்றும் பழங்குடி வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
கலந்தாய்வு பற்றிய கூடுதல் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இணையதளத்தில் (www.tn.health.org) தெரிந்து கொள்ளலாம். மேலும் 044- 26281563, 26216244, 26214844 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தகவல் பெறலாம்" என்று கூறப்பட்டுள்ளது.