தொழிலாளர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை : அக்.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
சனி, 11 அக்டோபர் 2008 (14:14 IST)
தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி (பி.எட்.), உடற்பயிற்சி பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கு தலா 25 பேருக்கு ஆண்டுக்கு ரூ.2,500 வீதமும், ஆசிரியர் பட்டயக்கல்வி, உடற்பயிற்சி பட்டயப் படிப்பு ஆகிய படிப்புக்கு தலா 150 பேருக்கு ஆண்டுக்கு ரூ.1,440 வீதமும் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த நலத்திட்டங்களை பெறுவதற்கு தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.10,000-க்குள் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வந்து சேர அக்டோபர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு "செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்,எண்.718, சென்னை-6 என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட தபால்தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.