சென்னை பல்கலை.யில் இணையதளம் மூலம் இசைப்பாடம்!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (13:32 IST)
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் வாயிலாக கர்நாடக இசை தொடர்பான பாடம் தொடங்கப்படும் என்று, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திரன், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கர்நாடக இசை மற்றும் நாட்டியம் குறித்த படிப்பை இணையதளம் வாயிலாக கற்க முடியும் என்றார்.

விரைவில் இப்பாடத்தை சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கும் என்று கூறிய அவர், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் வரும்போது இசைப் படிப்பு தொடர்பான நேரடிப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஊரகப்பகுதி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொலைநிலைக் கல்வி மூலம் புதிய பட்டயப் படிப்புகள் தொடங்கப்படும். விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனத்துடன் இணைந்து விமானப் பணிப்பெண், விமானப் போக்குவரத்து விருந்தோம்பல் குறித்த பட்டயப் படிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று துணைவேந்தர் ராமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்