தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர் விகிதம் உயர்வு!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:47 IST)
அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த எழுத்தறிவு நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, எழுத்தறிவு நாள் குறித்த சுவரொட்டிகள், புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் சராசரி விகிதத்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில், 75 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 82 சதவீதம், பெண்கள் 64 சதவீதம் ஆகும்.

தேசிய எழுத்தறிவு விகிதத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் தான் பின் தங்கியுள்ளது. ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் கல்வியறிவு பெறும் நோக்கத்துடன் நடப்பாண்டில் ரூ. 22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண் கல்வியில் தமிழகம் முன்னேறி உள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்