மருத்துவம், பொறியியல் துறைகளில் ஆர்வம் காட்டுவதைப் போல் படிக்கும்போதே விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று, துப்பாக்கிச்சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சென்னையை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் அபிநவ் பிந்த்ராவுக்கு கவுரவ முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது.
பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அபிநப் பிந்த்ரா பேசுகையில், கல்வியும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்க வேண்டும். கல்வியை ஊக்குவிப்பதைப் போலவே விளையாட்டுத்துறை மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பொறியியல், மருத்துவம் போன்றவற்றில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதைப்போல் விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், ஏதாவது ஒரு விளையாட்டில் மாணவர்கள் தங்கள் ஈடுபாட்டை முழுமையாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் வர வேண்டும். இதற்கு பெற்றோர்களும், பள்ளிகளும் உதவ வேண்டும் என்று அபிநவ் பிந்த்ரா கேட்டுக் கொண்டார்.