தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.எட் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.எட் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு கடந்த 3ஆம் தேதி நடந்தது. நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
பி.எட். நுழைவுத் தேர்வில் சிவகங்கையை அடுத்த திருப்பத்தூர் ஆர்.சி.பாத்திமா நடுநிலைப்பள்ளி ஆசிரியை பவுலின் கெமிலஸ் 83.25 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியை பால சரஸ்வதி 83 மதிப்பெண் பெற்று 2ஆம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் டான்செம் கல்வி அறக்கட்டளை மெட்ரிக் பள்ளி ஆசிரியை சுமதி 82.50 மதிப்பெண் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பி.எட் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 20, 21ம் தேதிகளில், சென்னை அசோக்நகர் ஸ்டெல்லா மாட்யுடினா கல்வியியல் கல்லூரியில் நடக்கிறது. இதற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 4ஐ பூர்த்தி செய்து கொண்டு வரவேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுக்கான ஆசிரியர் பணி அனுபவ சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.
நுழைவுத் தேர்வுக்கான மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்' என்ற பெயரில் ரூ.500க்கான வரைவோலையுடன் (டி.டி) விண்ணப்பிக்கலாம். வரும் 18ஆம் தேதிக்குள் மறு மதிப்பீட்டு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். மேலும் விவரம் வேண்டுவோர் 044-32467021, 32467003 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.