சொந்த கட்டடத்தில் இயங்காத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களி‌ன் அனுமதி ரத்து!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:28 IST)
தற்காலிக, வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனுமதி பெற்ற தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் சொந்த கட்டடத்திற்கு மாறியிருக்காவிட்டால் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்படும் என்று பெங்களூரு தேசிய ஆசிரியர் பயிற்சி வா‌ரிய‌ம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய ஆசிரியர் பயிற்சி வா‌ரிய‌ம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " புதிய பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் ஒளிவு மறைவற்ற தன்மையும், சட்ட திட்டங்களும் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. சிறந்த முறையில் கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டு தேசிய ஆசிரியர் பயிற்சி வா‌ரிய‌மவரைமுறைகளை பூர்த்திசெய்யும் எந்த சிறந்த நிறுவனத்திற்கும் சாதகமான பதில் கிடைக்கும். இதில் எந்த இடைத்தரகர் தலையீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே யாரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

2002 வரைமுறையின்படி, பயிற்சி நிறுவனத்திற்கு அனுமதி பெற்று தற்காலிக, வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நிறுவனங்கள் அனுமதி பெற்ற தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் சொந்த கட்டடத்திற்கு மாறியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து (2009-2010) மாணவர் சேர்க்கைக்கான அனுமதி முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்படும்.

கல்வி நிறுவனங்களின் செயல்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கல்வி நிறுவனங்களில் அடிக்கடி, திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும். தவறாக செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துடனோ, அல்லது நிறுவனத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே தங்களது உள்ளூர் ஆய்வுக்குழு மூலம் கண்காணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் பல்கலைக்கழகமோ, தேசிய ஆசிரியர் பயிற்சி வா‌ரிய‌மோ மேல் நடவடிக்கை எடுக்கும்.

அனைத்து கல்வி பயிற்சி நிறுவனங்களும் தங்களது இணையதளத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அதில், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் புகைப்படத்துடன் இடம்பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறுகளோ, ஒழுங்கீனங்களோ இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர் நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, அவர் மீது குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும். இதுபோன்ற தவறான சில அலுவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

01.07.2008 தேதியிட்ட கெசட் அறிவிப்பின்படி, 2008-09ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்களில் தேசிய ஆசிரியர் பயிற்சி வா‌ரிய‌‌த்‌தி‌ன் வரைமுறைகள் தரக்கட்டுப்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பங்கள் மீது 31.08.2008க்குள் முடிவெடுக்கப்படும்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்