தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருத்தணியை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.கமலக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 38 உதவி வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த பதவிக்கான எழுத்து தேர்வு வரும் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து 4 மணி வரை நடக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் 201 சிவில் நீதிபதிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த பதவிக்கும் நான் விண்ணப்பித்துள்ளேன். இதற்கான எழுத்து தேர்வுகள் கடந்த மே மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடப்பதாக இருந்தது.
பின்னர், இந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இதன் எழுத்து தேர்வு வரும் 2ஆம் தேதி சனிக்கிழமையும், 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரையும் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 பதவிகளுக்கும் கல்வித் தகுதி ஒன்றுதான். 2 பதவிகளுக்கான தேர்வும் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் நடத்தப்படுவதால், நான் பாதிக்கப்பட உள்ளேன். ஆகவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்து தேர்வை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும். 2, 3 ஆம் தேதிகளில் அந்த எழுத்து தேர்வை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.