அரசு மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்புகள்: அமைச்சர் அறிவிப்பு!
சனி, 26 ஜூலை 2008 (12:31 IST)
அரசு மருத்துவக் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் 5,000 மாணவர்கள் சேர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் கீழ்கண்ட 11 மருத்துவத் தொழில் சார்ந்த சான்றிதழ் படிப்பு பிரிவுகள், பட்டயப் படிப்பு பிரிவுகளில் 5,000 மாணவர்கள் சேர்ந்து படிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதய எதிர்மெல் ஒலி இயல் நுட்புனர், இதய மின்அலை வரைவு நுட்புனர், இதய இரத்தச் சுழற்சி (பம்ப்) நுட்புனர், இதய உட்புகுத்து ஆய்வக நுட்புனர், அவசரக் கவனிப்பு நுட்புனர், சுவாசக் கவனிப்பு நுட்புனர், ரத்த சுத்திகரிப்பு நுட்புனர், மயக்கவியல் நுட்புனர், அறுவை அரங்க நுட்புனர், முடநீக்கியல் நுட்புனர், சான்றிதழ் பெற்ற நுண்கதிர் உதவியாளர்.
இந்த படிப்புகளில் சேர மாணவ, மாணவியர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 17 ஆகவும், அதிகப்பட்சம் 30 ஆகவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டணமாக ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கு மொத்தக் கட்டணமாக ரூ.1,450-ம், 2 ஆண்டு பட்டயப் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.1,200-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மருத்துவம் சார்ந்த இந்த படிப்புகள் நடப்பு கல்வி ஆண்டில் 14 மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவ ஆய்வக நுட்புனர் பட்டயப் படிப்பு சென்னை அரசு கிங் நோய் தடுப்பு நிலையத்திலும் நடத்தப்படும்.
குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் எந்தெந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை தகவல் தொகுப்பேட்டில் சரிபார்த்த பின் உரிய மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.