8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!
வியாழன், 24 ஜூலை 2008 (14:02 IST)
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ''டிசம்பர் 2008-ல் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர் 2008 டிசம்பர் 1 ஆம் தேதி அன்று 12 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பள்ளியில் முறையான 8ஆம் வகுப்புக்கு குறைவாக படித்து படிப்பை தொடராதவர்களும், பள்ளிப்படிப்பு படிக்காதவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை அரசு தேர்வுகள் மண்டல இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது சுயவிலாசம் எழுதி ரூ.10-க்கான தபால் வில்லை ஒட்டிய உறையை அனுப்பி தபால் மூலமாகவோ வரும் 20ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ.125 அரசு கருவூலத்தில் செலுத்தியதற்கான கருவூலச்சீட்டையும், பிறந்த தேதிக்கு ஆதாரமாக பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது பள்ளி மாற்றுச்சான்றிதழின் நகல் அல்லது முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதிப்பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றையும், மனுதாரரின் வீட்டு முகவரி எழுதி ரூ.5, ரூ.22-க்கு தபால் வில்லை ஒட்டிய 2 உறைகளையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப மனுவில் ஒட்டப்படும் புகைப்படம், பிறந்த தேதிக்கு ஆதாரமான சான்றிதல் நகலுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் அரசுத் தேர்வுகள் மணடலத் துணை இயக்குநர், 9/8, ஆற்றங்கரை வீதி, புதுப்பாளையம், கடலூர்- 607001 என்ற முகவரியில் வரும் 20ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.