அரசு பள்ளிகளில் கணினி கல்வி சமநிலைத் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்து!
புதன், 23 ஜூலை 2008 (16:24 IST)
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கணினி கல்வி சமநிலை திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கும், அமெரிக்க இந்திய பவுண்டேஷன் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் குற்றாலிங்கம், அமெரிக்க இந்திய பவுண்டேஷன் சார்பில் அதன் இயக்குநர் சுந்தர கிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.
அமெரிக்க இந்திய பவுன்டேஷன் நிறுவனம், தமிழக அரசுடன் இணைந்து கணினி கல்வி சமநிலை (Digital Equalizer Programme) திட்டத்தினை தமிழகத்திலுள்ள கடலோர மாவட்டங்களில் உள்ள 150 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி தமிழக அரசு பள்ளிகளுக்கு கணினி மற்றும் இதர அடிப்படை வசதிகளை இந்நிறுவனம் ஏற்படுத்தி தரும்.
இத்திட்டம், பள்ளிகளில் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு நடந்திட முழு ஒத்துழைப்பு தரவும் உத்திரவாதம் அளித்துள்ளது. மூன்றாண்டுகளுக்குப் பின் அமெரிக்க பவுண்டேஷன் தனது ஆதரவை விலக்கிக் கொண்டாலும், பள்ளிகளே இந்த திட்டத்தை தொடந்து நடத்த இயலும். இந்த மூன்றாண்டுகளில் பள்ளியில் உள்ள ஆசிரியர், பள்ளி நிர்வாகிகளை ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்கு உட்படுத்தி இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வாய்ப்புள்ளது.
முதற்கட்டமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலுள்ள 42 பள்ளிகள் வரவழைக்கப்பட்டு, அதில் 7 பள்ளிகள் இப்பயிற்சி முறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே முறையினைப் பின்பற்றி தமிழகத்திலுள்ள மற்ற பள்ளிகளிலும் இந்த முறை செயல்படுத்த பரிசீலிக்கப்படும்.
இந்த 3 ஆண்டு கால பயிற்சியின் மூலம் மாணவர்கள் தங்களுடைய பாடத் திட்டங்களை அவர்களே திட்டமிட்டு செயல்படுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் 6ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொள்வார்கள். அமெரிக்கன் பவுண்டேஷன் சார்பில் 25 குழுக்கள் இப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒரு குழு 5 முதல் 6 பள்ளிகளை நிர்வகிக்கும் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.