தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களுக்கு கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் என்று தேசிய மாணவர் படை இயக்குநரக துணை இயக்குநர் சித்தநேவிஸ் கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இந்தியாவில் 30 லட்சம் பேர் தேசிய மாணவர்படையில் உள்ளனர். தமிழத்தில் தேசிய மாணவர் படையில் ஒரு லட்சம் பேர் உள்ளனர். மேலும் கூடுதலாக 20 ஆயிரம் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு தனி ஆளுமைத் திறன், பேச்சுபயிற்சி, கடற்படையில் உள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய மாணவர் படைப் பிரிவை இரண்டாக பிரித்து, திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும், வேலைவாய்ப்புக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு தேசிய மாணவர் படை பிரிவு அலுவலகத்திலும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.