அண்ணா பல்கலை.யின் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒரே பாடத்திட்டம்!
புதன், 23 ஜூலை 2008 (12:27 IST)
தமிழகத்தில், நான்கு அண்ணா பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளன.
சென்னையில் நான்கு அண்ணா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் சென்னை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர், கோவை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன், திருச்சி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்குப் பின் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள 4 அண்ணா பல்கலைக்கழகங்களை சேர்ந்த 349 பொறியியல் கல்லூரிகளிலும் ஒரே பாடத்திட்டத்தை இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் செமஸ்டருக்கு உரிய பாடத்திட்டமும் தயாராக உள்ளது. இந்த பாடத்திட்டம் அனைத்து கல்லூரிக்கும் உடனடியாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்து மற்ற செமஸ்டர்களுக்கான பாடத்திட்டமும் விரைவில் தயாராகி விடும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.
4 பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டமாக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும், துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.