மன்மோகன் படிப்புதவி திட்டம்: 3 இந்தியர்கள் தேர்வு!

வெள்ளி, 18 ஜூலை 2008 (17:34 IST)
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஜான்'ஸ் கல்லூரியின் 'டாக்டர் மன்மோகன்சிங் படிப்புதவி' திட்டத்திற்கு இந்திய மாணவர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது செயின்ட் ஜான்'ஸ் கல்லூரி.

இந்தியப் பிரதமரும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான மன்மோகன் சிங்கை கவுரவிக்கும் நோக்கில் 'டாக்டர் மன்மோகன் சிங் படிப்புதவி' திட்டத்தை அங்குள்ள பிரிட்டீஷ் கவுன்சில் ஏற்படுத்தி உள்ளது.

செயின்ட் ஜான்'ஸ் கல்லூரியில் ஆராய்ச்சி செய்து வரும் சிறந்த இந்திய மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதன் முதலாவது உதவித் தொகையை பெறும் சிறப்பு, டெல்லி மற்றும் கொல்கட்டாவைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.

கொல்கட்டாவைச் சேர்ந்த நீலாத்ரி பானர்ஜி (24), டெல்லியைச் சேர்ந்தவர்களான மானஸா பட்னம் (23) மற்றும் நிது துக்கால் (31) ஆகியோர் 'மன்மோகன்சிங்' கல்விச் சலுகைகளை பெறவிருக்கின்றனர்.

இவர்களில் நீலாத்ரி பானர்ஜி கான்பூர் ஐ.ஐ.டி.யில் தனது முதுநிலை பட்டத்தை பெற்று தற்போது கல்வியியல் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார். இயற்கை காட்சிகளை தத்ரூபமாக புகைப்படமெடுப்பதில் இவர் ஆர்வம் கொண்டவர்.

லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த மானஸா பட்னத்திற்கு மலை ஏறுவதில் நாட்டம் அதிகம். ஆசிரியராக பணி புரிந்த அனுபம் உடைய நிது துக்கால், கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்