8 புதிய ஐ.ஐ.டி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வியாழன், 17 ஜூலை 2008 (18:08 IST)
இந்தியாவில், பீகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மேலும் 8 புதிய இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை (IITs) அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
பீகார், ஆந்திரா, ராஜஸ்தான், ஒரிஸ்ஸா, குஜராத், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ், மத்தியப் பிரதேஷ் மாநிலம் இந்தூர் ஆகிய இடங்களில் ஒரு ஐ.ஐ.டிக்கு ரூ.760 கோடி வீதம் மொத்தம் ரூ,6.080 கோடி செலவில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதி முதல் 6 புதிய ஐ.ஐ.டிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான படிப்பு தொடங்கப்பட உள்ளது.
ஆந்திரா, பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஐ.ஐ.டி.க்கள் அமைய உள்ள கட்டிடம் அருகே உள்ள தற்காலிக வளாகத்தில், தலா 120 மாணவர்களுக்கான பி.டெக்., (B.Tech) வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மூன்று ஐ.ஐ.டிக்களும் முறையே சென்னை, கவுகாத்தி, மும்பை ஐ.ஐ.டி.க்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும்.
இதேபோல், ராஜஸ்தான், பஞ்சாப், ஒரிஸ்ஸா ஐ.ஐ.டி.க்கள் முறையே கான்பூர், டெல்லி, காரக்பூர் ஐ.ஐ.டி.க்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் அமைய உள்ள ஐ.ஐ.டிக்களில் வகுப்புகள் அடுத்த 2009-10ஆம் கல்வியாண்டு முதல் தொடங்குகிறது.
இந்த புதிய ஐ.ஐ.டி.க்கள் தொடங்கப்பட்ட ஆண்டு முதல், ஆண்டுக்கு 30 புதிய பேராசிரியர் பதவிகளை உருவாக்கவும், ஒரு இயக்குனர், பதிவாளரை நியமிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதழ் வழங்கியுள்ளது.
தற்போது உள்ள ஐ.ஐ.டி.க்களில் இயக்குனர் பதவி வகிப்பவர்களின் சம்பளத்தை ரூ.25,000 என்பதை ரூ.26,000 ஆக உயர்த்தி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.