கவனம் சிதறுவது ஏன்? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

வியாழன், 17 ஜூலை 2008 (16:49 IST)
லண்டன்: மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் கவனம் சிதறுவதற்க்கு, ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் மூளையை எட்டாததே காரணம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கவனக் குறைவால் அடிக்கடி திட்டு வாங்கும் குழந்தைகளை, ஏன் சில நேரங்களில் பெரியவர்களையே பார்த்திருக்கிறோம். கவனக்குறைவு என்பது ஒருவரின் அலட்சியத்தால் ஏற்படுவதாகத்தான் எல்லோரும் பொதுவாகக் கருதுகிறோம்.

ஆனால், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு வேறுவகையானக் காரணத்தை தற்போது கண்டறிந்துள்ளனர்.

லண்டனில் உள்ள 'யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன்', 'நியூ கேசில் யுனிவர்சிட்டி' ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

இதில் பெறப்பட்ட தகவல்களின்படி 'அசிடில்கொலின்' என்ற வேதிப்பொருள் மூளையின் நரம்புகளை சென்றடைவது தடைபடும்போது, மனம் ஒருநிலைப்படுத்தப்படாமல் கவனம் சிதறுவதைக் கண்டறிந்தனர்.

இதை உறுதி செய்வதற்காக குரங்குக் குட்டிகள் சிலவற்றுக்கு இந்த வேதிப்பொருளைச் செலுத்தி அதன் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இதில், அசிடில்கொலைன் செலுத்தப்பட்ட குரங்குக் குட்டிகளின் நடவடிக்கைகள், மற்ற குரங்குகளைக் காட்டிலும் மேம்பட்டு இருந்ததை உறுதி செய்தனர்.

நமது அன்றான வாழ்வில் மனதை ஒருநிலைப்படுத்தி கவனத்துடன் செயல் படுவது அவசியமான ஒன்றாகும். எனினும் மூளையின் நரம்புக்கு ஒரு சொட்டாவது அசிடில்கொலைன் வேதிப்பொருள் செல்லவில்லை என்றால் இத்தகைய கவனச் சிதறல்கள் தொடரும் என்பதே இந்த ஆராய்ச்சியில் நிரூபனமானது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டவர்களில் ஒருவரான பேராசிரியர் அலெக்ஸ் திலி கூறுகையில், 'நினைவின்மை நோய்க்கான மருத்துவத்திற்கும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பெரும் உதவியாக அமைந்துள்ளன' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்