காமராஜர் பல்கலை.யில் கல்வியியல் ஆராய்ச்சி மையம்!

புதன், 16 ஜூலை 2008 (18:19 IST)
மதுரை: நாட்டிலேயே முதலாவதாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த ஆராய்ச்சி மையம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் டெல்லி தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தலைவர் முகமது அக்தர் சித்திக் பங்கேற்றார்.

அவர் தனது உரையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ரூ.1 கோடி செலவில் கல்வியியல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், நாட்டில் இத்தகைய ஆராய்ச்சி மையம் அமைவது இதுவே முதல்முறை என்றும் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், கல்வித்தரம் போன்றவைகளை உயர்த்தும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறிய அவர், குழந்தைகளின் திறன் அறிந்து ஆசிரியர்கள் கல்வியை பயிற்றுவிக்க வேண்டும் என்றார்.

குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்வியை கற்பிப்பது பற்றி இந்த மையம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று அக்தர் சித்திக் கேட்டுக் கொண்டார்.

பல்கலைக்கழக துணை வேந்தர் கற்பகக் குமாரவேல் உட்பட பல்வேறு கல்வியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்