சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 360 இடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வை சென்னையில் அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்தார். பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவில் முதலிடத்தை பெற்ற ரேக்னா ராஜேந்திரன், மனோஜ்குமார், பல்லவி, ஆஷா கணேசன் ஆகியோருக்கு சேர்க்கை கடிதங்களையும் அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:
தமிழகத்தில் புதிதாக 55 பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) ஒப்புதல் அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கூடுதலாக 360 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒற்றைச்சாளர முறையில், அதிகமானோர் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
மொத்த இடங்களில் 75,858 இடங்கள் அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவற்றில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 8,853 இடங்கள் ஆகும். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 67,718 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை நடைபெறுகிறது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் 1,15,488 பேர். இதில் 65,763 பேர் மாணவர்கள்; 49,725 பேர் மாணவிகள் ஆவர்.
இவர்களில் முற்படுத்தப்பட்டோர் 11,166; பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் 5,608; பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் 6,694; பிற்படுத்தப்பட்டோர் 50,674; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 25,854; தாழ்த்தப்பட்டோர் 15,538; பழங்குடியினர் 354 பேர் ஆவர்.
அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.