அரசு தொழில்நுட்பத் தேர்வுக்கு 16-ஆம் தேதி முதல் விண்ணப்பம்!
சனி, 12 ஜூலை 2008 (11:48 IST)
அரசு தொழில் நுட்பத் தேர்வுக்கு வரும் 16ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஓவியம், தையல், இசை, நடனம், அச்சக்கலை, விவாயம் மற்றும் கைத்தறி நெசவு பிரிவுகளில் தேர்வு எழுத, முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வுக்கான கட்டணத்தை கருவூல ரசீது மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் வரும் 16-ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 18-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு கல்வி விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் அசல் கருவூல ரசீது, கல்வித் தகுதி சான்றிதழ் நகல் (மேலொப்பத்துடன்), தொழில் நுட்ப கீழ்நிலை சான்றிதழ் நகல் (மேல்நிலைக்கு விண்ணப்பிப்பவர் மட்டும்) இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ‘கூடுதல் செயலாளர் (தொழில் நுட்பத் தேர்வு) அரசு தேர்வுகள் இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை- 6' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும் உறையின் மீது, ‘அரசு தொழில்நுட்பத் தேர்வுகள்- நவம்பர் 2008’ என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப ஆகஸ்ட் 18-ஆம் தேதி கடைசி நாள்.
தேர்வு தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 3-வது வாரத்தில் பத்திரிகைகளில் வெளியிடப்படும். மனுதாரர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள், அவர்கள் மனுவில் குறிப்பிட்ட தேர்வு மையங்களில், தேர்வுக்கு 7 நாட்கள் முன்னதாக நேரில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்படி தேர்வில் தேர்ச்சி பெற்ற விவரம் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று வசந்தி ஜீவானந்தம் கூறியுள்ளார்.