தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தவில்லை: மருத்துவ கவுன்சில்!
வியாழன், 19 ஜூன் 2008 (13:15 IST)
''தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்த்தவில்லை'' என்று பல் மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.
அகில இந்திய அளவில் மருத்துவபடிப்புக்கு கவுன்சில் இருப்பதுபோல பல் மருத்துவ படிப்புக்கும் கவுன்சில் (டெண்டல் கவுன்சில் ஆப் இந்தியா) உள்ளது. இதன் தலைவராக உள்ள மருத்துவர் அனில் கோஹ்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், தனியார் பல்மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை.
ஆனால் பல் மருத்துவ படிப்பில் சற்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்மருத்துவ படிப்பு மொத்தம் 5 வருடமாகும். அவற்றில் 4 வருடம் படிப்பும் ஒரு வருடம் பயிற்சி காலம் ஆகும். தற்போது அந்த முறையில் சற்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மொத்தமான 5 வருடத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. கூடுதலாக புதிய தொழில் நுட்பங்கள், கதிர்இயக்க பாடம் உள்பட பல பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் பாடம் கற்பிக்க கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனவே 5வது வருடமும் படிக்க வேண்டியுள்ளது. 5 வருடத்திற்குள் பயிற்சிக்கான ஒரு வருடமும் அடக்கம்.
சில தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அவ்வாறு கட்டணம் அதிகமாக வசூலித்தால் அதுபற்றி மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் புகார்தெரிவித்தால் சம்பந்தபட்ட பல்மருத்துவக்கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனில் கோஹ்லி கூறினார்.