தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி பி.எட். படிப்பு தொடக்கம்!
சனி, 29 மார்ச் 2008 (10:50 IST)
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு அஞ்சல்வழி பி.எட். படிப்பு புதிதாக தொடங்கப்படுகிறது என்று தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) கு.அண்ணாதுரை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) கு.அண்ணாதுரை கூறுகையில், தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்திலும் அஞ்சல்வழி பி.எட். படிப்பு இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு நகரங்களில் மே 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பி.ஏ. பி.எஸ்சி., பட்டதாரிகள் (தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்கள்) இதற்கு விண்ணப்பிக்கலாம். பொருளாதாரம், வணிகவியல், கம்ப்ïட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ் போன்ற பாடங்களாக இருந்தால் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்திலும் மற்றும் மாவட்ட, தாலுகா அளவில் அமைந்துள்ள அதன் கல்வி மையங்களிலும் கிடைக்கும். கட்டணம் ரூ.500. கல்வி மையங்கள் பற்றிய விவரங்களை 04362-227152 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை தபாலில் பெற விரும்புவோர், `இயக்குனர், தொலைதூரக்கல்வி இயக்ககம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்' என்ற பெயருக்கு ரூ.550-க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். முகவரி: இயக்குனர், தொலைநிலை கல்வி இயக்ககம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010.
தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை டவுண்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்ப கட்டணத்திற்காக ரூ.500 டி.டி. இணைத்து அனுப்ப வேண்டும். ஏப்ரல் 22ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் தொலைநிலை கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிட வேண்டும் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) கு.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.