ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் 50 விழுக்காடு கட்டண உயர்வு!
செவ்வாய், 11 மார்ச் 2008 (19:17 IST)
ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணம் 50 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் வரும் கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நிர்வாக படிப்பில் நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனமான இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) படிக்கும் ஒரு மாணவருக்கு தற்போதே ரூ.1.38 கோடி ஆண்டு சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளது. ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை உள்நாட்டில் மட்டுமின்றி, அயல்நாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுகொண்டு வேலைக்கு அமர்த்துகின்றனர். இதனால், ஆண்டுதோறும் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய மூன்று ஐ.ஐ.எம். கல்வி நிறுவன வாரிய ஆளுநர்கள், 'முதுநிலை பாடத்திற்கான கல்வி கட்டணத்தை உயர்த்துவது' என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஐ.ஐ.எம்.-அகமதாபாத், ஐ.ஐ.எம். கொல்கத்தா ஆகிய கல்வி நிறுவனங்களில் முதல் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இதன் கல்வி கட்டணம் ரூ.2 லட்சமாக இருந்தது.
ஐ.ஐ.எம். -பெங்களூரு கல்வி நிறுவனத்தில் ரூ.2.5 லட்சமாக உள்ள கட்டணம் ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் லக்னோ (உத்தர பிரதேசம்), இன்டூர் (மத்திய பிரதேசம்), கோழிக்கோடு (கேரளா) உட்பட மொத்தம் ஆறு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் மூன்றில் மட்டும் கல்வி கட்டணங்கள் 50 விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
'இதற்கு மத்திய அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை' என்று அமைச்சர் கூறியுள்ளார்.
'கல்வி உபகரணங்கள் உட்பட அனைத்தின் விலையும் உயர்ந்துவருகிறது. இந்த கல்வி கட்டண உயர்வு மீதான முடிவும் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது' என்று ஐ.ஐ.எம். - அகமதபாத மூத்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.