பிரிட்டன் குடியேற்றத்திற்கும் உதவும் ஐ.இ.எல்.டி.எஸ்.!
செவ்வாய், 11 மார்ச் 2008 (17:03 IST)
ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) என்ற சர்வதேச ஆங்கில மொழிப் புலமை பரிசோதனை தேர்வுகள் பிரிட்டன், ஆஸ்திரேலிய கல்வியாளர்களால் நடத்தப்படுகிறது. இத்தேர்வை 2007-ம் ஆண்டில் மட்டும் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டில் மட்டும் இத்தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
பல்கலைகழக நுழைவுத்தேர்வு, புதிய குடியேற்ற கொள்கைகள், தனித்துவமிக்க அங்கீகாரம் ஆகியவற்றிற்கு இந்த சான்றிதழ் அவசியம். பிப்ரவரி 2008 முதல் பிரிட்டன் உள்துறை, புள்ளிகள் அடிப்படையிலான புதிய குடியேற்ற முறையை அறிமுகப்படுத்துயுள்ளது. இந்த முறை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தேவையில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர் ஆகியோர் ஐ.இ.எல்.டி.எஸ். சான்றிதழுக்கான முதல் வகுப்பினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்கும்போதே, விண்ணப்பதாரரின் ஆங்கில மொழிப்புலமை குறித்த ஆவணங்களை காண்பிக்க வேண்டியுள்ளது. ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் 6.5 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றிருப்பவர்கள் அதிக மொழி திறமை உள்ளவர்களாக அந்நாட்டு அரசு அங்கீகரிக்கிறது. முதல் தரவகுப்பினர் தங்களது ஆங்கில மொழிப் புலமையை சி1 அளவுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
68 நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், அரசு நிறுவனங்கள் இத்தேர்வை அங்கீகரித்துள்ளன. இதனால், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்புகள் பிரகாசமாகிறது. இத்தேர்வை உலகம் முழுவதிலும் 6 ஆயிரம் அமைப்புகள் நடத்துகின்றன. இத்தேர்வை நடத்த பிரிட்டனில் மட்டும் ஆயிரத்து 300 நிறுவனங்கள் உள்ளன.
பிரிட்டிஷ் கவுன்சில் தலைவர் மார்ட்டின் டேவிட்சன் கூறுகையில், "புதிய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வை பிரிட்டன் அரசு அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுவதால், சர்வதேச அளவில் ஐ.இ.எல்.டி.எஸ். முன்னணி ஆங்கில மொழித்தேர்வு என்பதில் சந்தேகமில்லை. பிரிட்டிஷ் கவுன்சிலும் 101 நாடுகளில் 400 பகுதிகளில் இத்தேர்வை நடத்துகிறது" என்றார்.
'உலகம் முழுவதிலும் பல்கலைகழகங்கள், அரசு அலுவலகங்களில் பெறப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, ஒருவருக்கு ஆங்கிலம் எநதளவுக்கு தெரிகிறது என்பதை அறிய ஐ.இ.எல்.டி.எஸ். சிறந்த தேர்வு என்று தெரிய வந்துள்ளது. ஏனெனில் ஒருவருடைய பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவற்றில் உள்ள திறமையை உள்ளபடியே அறிய முடிகிறது' என்கிறார் அமெரிக்காவுக்கான ஐ.இ.எல்.டி.எஸ். இயக்குனர் பெர்ய்ல் மெய்ரோன்.
அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் நேர்முகத் தேர்வு உட்பட ஆண்டுக்கு 48 முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தென்மாநிலங்களில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, கோட்டயம், கோவை, திருவனந்தபுரம், திருச்சி, மதுரை, மங்களுர், புதுச்சேரி, திருச்சூர், கோழிக்கோடு, விசாகப்பட்டிணம், விஜயவாடா ஆகிய 15 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு: பிரிட்டிஷ் கவுன்சில் 737, அண்ணா சாலை, சென்னை 600 002. தொலைபேசி: 044-42050600, +91 98410 60745 இ-மெயில்: [email protected] www.britishcouncil.org/india