போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுங்க...

போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் அரசு ஆட்சி முறை, சட்டம் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. எனவே அந்தப் பகுதியில் குறிப்பான வினா விடையாக, தக்க விளக்கங்களுடன் இப் பகுதி உங்களுக்காக வழங்கப்படுகிறது. படித்து, சேமித்து வைத்து, நெட்டுருச் செய்தால் போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் போட்டியிலும் என்றும் பயன்படும்.

அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் வள்ளுவர். அதாவது, அறிவு எதிரியிடமிருந்தும் நம்மைக் காக்கும் ஆயுதம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 14 எதை வலியுறுத்துகிறது?

சட்டத்தில் எல்லாரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்தாலும் சரி, வேற்று நாட்டினராக இருந்தாலும் சரி, அவர்களுக்குரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நம் அரசமைப்புச் சட்டத்தை இயற்றிக் கொடுத்த பெருந்தலைவர்கள் கருத்துச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. பொதுவான சமத்துவத்தை விதி 14 பேசுகிறது. இதைத் தொடர்ந்து விதி 15, 16 ஆகியவை நம் போன்ற இந்தியக் குடிமக்களுக்கான குறிப்பிட்ட சமத்துவ உரிமையை வழங்குகின்றன.

? இந்திய நாடாளுமன்றத்திற்குள் செல்லக் கூடிய உரிமை பெற்ற அதன் உறுப்பினர் அல்லாதவர் (மிக முக்கியப் பதவி வகிப்பவர்) யார் தெரியுமா?

இந்தியக் குடியரசுத் தலைவர் தான் அவர். நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்திற்குள் உறையாற்றச் செல்லும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. குடியரசுத் தலைவர், மக்கள் அவை (லோக் சபை) மேலவை (ராஜ்ய சபை) ஆகியவற்றைக் கொண்டது தான் இந்திய நாடாளுமன்றம். எந்த சட்ட முன்வடிவும் இரண்டு அவைகளிலும் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறாவிட்டால் அது சட்டமாகாது. இந்த முறையில் முதல் குடிமகன் எனப்படும் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இல்லாவிட்டாலும் ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளார்.

? 18 வயதை அடைந்து விட்டால் எந்தக் குடிமகனும் (தகுதியற்றவராக சட்டத்தால் அறிவிக்கப்பட்டாலோழிய) தேர்தலில் வாக்களிக்கலாம். இது உங்களுக்குத் தெரியும். அதை எந்த அரசியல் சட்ட விதி எங்களுக்கு வழங்கியுள்ளது. சொல்லுங்கள் பார்ப்போம்.

விதி எண் 326. 1988க்கு முன்னர், வாக்களிக்கத் தகுதியான வயது 21 என்று இருந்தது.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுங்க...

வெப்துனியாவைப் படிக்கவும்