விமானத்தைத் தேட இந்தியப் பெருங்கடல் பகுதியில் முயற்சி

வெள்ளி, 14 மார்ச் 2014 (14:47 IST)
webdunia photo
FILE
கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் காணாமல் போனது.

விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் அந்த விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியில் மலேசியா, சீனா,சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் முதலில் ஈடுபட்டன. பிறகு அப்பணியில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்திருக்கின்றன.

தேடும் முயற்சிகள் முதலில் மலேசியாவுக்கு கிழக்கே உள்ள தென் சீனக் கடல்பரப்பில் நடந்து வந்தன. அங்குதான் காணாமல் போன விமானத்திலிருந்து கடைசியாக வான் போக்குவரத்துக் குழுவுடன் , விமானிகள் தொடர்பில் இருந்தனர்.

ஆனால் இப்போது சில புதிய தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த முயற்சி மலேசியாவுக்கு மேற்காக, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த விமானம் ராடார்களின் பார்வையில் இருந்து மறைந்த பின்னர் பல மணி நேரங்கள் செய்கோள் ஒன்றுக்கு தரவுகளை அனுப்பிக்கொண்டிருந்திருக்கலாம் என்று சில அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
ஆனால் புதிதாக குறிப்பிடத்தக்க துப்பு எதுவும் கிடைக்கவில்லை, புதிய கோணத்தில் விசாரணை நடக்கிறது அவ்வளவுதான் என்று வெள்ளை மாளிகைக்காகப் பேசவல்ல அதிகாரி ஜே கார்னி தெரிவித்தார்.
அமெரிக்கக் கடற்படைக் கப்பலான யுஎஸ் எஸ் கிட் தாய்லாந்து வளைகுடாவிலிருந்து மலேசியாவின் மேற்குக் கடற்கரைக்கு விரைகிறது என்று அமெரிக்க கடற்படை அறிவித்திருக்கிறது. இதற்கிடையே, ஏற்கனவே, இந்தியக் கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படைகளும் இந்த முயற்சியில் மலேசிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இறங்கியிருக்கின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்