நவராத்திரியின் ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம்.
* பண்டிகை நாட்களில், மெது வடைக்கு ஊறப்போடும் போது உளுந்துடன் சிறிது துவரம் பருப்பு சேர்த்து ஊறப்போட்டு அரைப்பது நல்லது.
* குங்குமம் பிளஸ் மஞ்சள் சேர்த்து வரும் பாக்கெட் மற்றும் டப்பாக்களில் சில சமயம் வண்டு இருக்கும். அதனால், வெற்றிலைப் பாக்குடன், மஞ்சள் கிழங்கு வைத்துக் கொடுப்பதே நல்லது.
* நவராத்திரிக்கு, வெற்றிலை பாக்குடன் வைத்துக் கொடுக்கும் பொருள் எதுவானாலும், அவர்கள் பயன்படுத்தும் விதமாகக் கொடுப்பது நல்லது. 50கிராம் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக நெய்யில் வறுத்து வைத்துக் கொண்டால், தினம் வறுக்கும் வேலை மிச்சம்.
* கொலு பார்க்க யார் வீட்டுக்கு போனாலும், பழம் அல்லது பூ வாங்கிப் போவது நல்லது. மறுநாள், பூஜைக்கு அவர்கள் உபயோகித்துக் கொள்ள முடியும்.
* சுண்டல் போட்டுக் கொடுக்க, தொன்னைகளை உபயோகப்படுத்தலாம். கொலு முடியும் நாள் மறக்காமல், கண்டிப்பாக மரப்பாச்சி பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.
* பருப்பு அல்லது தேங்காயில் செய்த பூரணம் நீர்த்து விட்டால், ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் பூரணத்தை போட்டு, குறைந்த தீயில் சில நிமிடங்கள் கிளறுங்கள். ஆறியதும், பூரணம் உருட்டும் பதத்துக்கு கெட்டியாகி விடும்.
* நவராத்திரிக்கு வரும் விருந்தாளிகளுக்கு என்ன பரிசளிக்கப் போகிறீர்களோ, அந்த பரிசுப் பொருளுக்கேற்ற அளவுகளில் கெட்டியான பேப்பர் பைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தாம்பூலம் மற்றும் பரிசுப் பொருட்களை இந்த பையில் போட்டுக் கொடுத்தால், எடுத்து செல்ல சுலபமாக இருக்கும்.
* உங்கள் ஏரியாவில் பாட்டு, வீணை என்று அசத்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை கூப்பிட்டு, கொலுவில் கச்சேரி செய்ய சொல்லலாம்.
* தினமும் இரவில் கொலு பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்தல் அவசியம். நவராத்திரியில் தினமும் பாயசம் வைப்போம். அதற்கு 25 கிராம் ஏலக்காயை லேசாக வறுத்து, சிறிது சர்க்கரை சேர்த்துப் பொடித்து வைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும்.
* தரையில் பொம்மை வைத்தாலும் சரி அல்லது படிக்கட்டுகள் அமைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வைத்தாலும் சரி, கண்டிப்பாக கொலுவை சுற்றி பார்டர் வையுங்கள். அதாவது சிறிய கோலங்களை, கலர் கலரான கொலுவை சுற்றி வரையலாம். கோல அச்சுக்கள் அல்லது ஸ்டிக்கர் கோலங்கள் பயன்படுத்தியும், பார்டர் உருவாக்கலாம்.
* வீட்டுக்கு வரும் விருந்தினர்களில் பெண்களுக்கு தட்டு, ஜாக்கெட், குங்கும டப்பா என்று கொடுப்பது வழக்கம். கூடவே வரும் ஆண்களுக்கு பேனா, கைக்குட்டை, கீ செயின் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டால், அவர்களையும் மகிழ்விக்கலாம்.