மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த 46 வயதுள்ள மருத்துவருக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் உடலில் தடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து மருத்துவரை அணுகியபோது, அவரது ரத்த மாதிரி ஆய்வுக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு மூலம் இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அதை தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி இரண்டு கர்ப்பிணி பெண்கள் உள்பட ஆறு பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், வீடுகள்தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து அவற்றை பரிசோதனைக்கு அனுப்புவது, மருத்துவமனையில் ஜிகா வைரஸ் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை அளிக்க தனி வார்டு உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.