காதலிக்க மறுத்த இளம் பெண் கழுத்தறுத்து கொலை: பட்டப்பகலில் பயங்கரம்

ஞாயிறு, 3 ஜூலை 2016 (16:10 IST)
சென்னை சுவாதி படுகொலை போல் ஆந்திராவிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காதலை ஏற்க மறுத்த ஒரு இளம்பெண், கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
சமீபத்தில்தான், சென்னையை சேர்ந்த பெண் இன்ஜினியர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் என்ற வாலிபரால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அதன் பரபரப்பு அடங்குவதற்குள் தெலுங்கானாவில் இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
 
தெலுங்கான மாநிலம் அதிபாபாத் மாவட்டம் பைன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சருபாய். அவரின் மகள் சந்தியா(18). இவர் சருபாயுடன் சேர்ந்து அருகில் இருக்கும் பீடி சுற்றும் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அவரின் வீட்டின் அருகே வசிக்கும், கல்லூரி மாணவர் மகேஷ்(22), சுவாதியை ஒருதலை பட்சமாக காதலித்துள்ளார். ஆனால் சந்தியா அவரின் காதலை ஏற்றுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
 
மேலும், சந்தியா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளமுடியாத வண்ணம் பல்வேறு தடைகளை மகேஷ் ஏற்படுத்தி உள்ளார். ஒருமுறை, நடக்கவிருந்த சந்தியாவின் நிச்சயதார்த்தையும் தடுத்து நிறுத்தியுள்ளார். தொடர்ச்சியாக தொல்லை கொடுத்த மகேஷ் மீது ஏற்கனவே சந்தியா போலீசில் புகார் கொடுத்து உள்ளார். ஆனால் போலீசார் மகேஷ் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிகிறது. 
 
மகேஷ், கடந்த ஒரு வருடாமாக தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுமாறு சுவாதியை வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் சந்தியாவின் வீட்டின் அருகே சென்று தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், சந்தியாவோ, தனக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது, எனவே என் பின்னால் சுற்றாதே என்று கூறியுள்ளார். 
 
இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ், சந்தியாவின் பின்னாலேயே சென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து விட்டு ஓடிவிட்டார். துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சந்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக் கண்ட அவரின் தாய் அவரது உடலை பார்த்து கதறி துடித்தார்.
 
அந்த பகுதி போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மகேஷை தேடி வந்தனர். இந்நிலையில் மகேஷ் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்