90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மற்றும் வீரர் பஜ்ரங் புனியா இருவரும் கடந்த புதன்கிழமை டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர்.
இதன் மூலம் இருவரும் காங்கிரஸில் இணைய உள்ளதாகவும், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி காங்கிரஸில் இன்று இணைந்தனர்.