’எவருக்கும் வேலை வழங்க வேண்டாம்’ - ஏழைகள் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு

புதன், 26 அக்டோபர் 2016 (11:12 IST)
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் மேலும் கூடுதலான மக்களுக்கு வேலை வழங்குவதை நிறுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ‘வாட்ஸ்அப்’ மூலம் உத்தரவிட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
 

 
முந்தைய காங்கிரஸ் அரசு கிராமப்புற மக்களுக்கு வாழ்க்கை உத்திரவாதம் அளிக்கும் பொருட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ் வேலை வழங்கி வந்தது.
 
ஆனால், தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு, புதிதாக எவருக்கும் வேலை வழங்க வேண்டாம் என்று வாட்ஸ் அப் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.
 
இத்திட்டத்திற்கு அதிக அளவிற்குநிதி ஒதுக்க முடியாது என்றும், இத்திட்டத்தை ‘புத்திசாலித்தனமாக’ பயன்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது.
 
இத்திட்டத்தின் கீழ் மேலும் கூடுதலாக நிதி ஒதுக்க முடியாது என்பதால், மாநிலங்கள் ஏற்கனவே துவங்கியுள்ள திட்டப்பணிகள் குறித்து ஏற்கனவே அனுப்பியுள்ள நிதியை வைத்துக்கொண்டு, ‘சாதுர்யமாகத்’ திட்டமிட வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
 
கிராமப்புற ஏழைமக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் இத்திட்டத்தின்கீழ் 100 நாட்களுக்கு வேலை வழங்குவது அரசின் கட்டாயமாகும். ஆனால் மத்திய அரசு இத்திட் டத்திற்கு இனி நிதி ஒதுக்க இயலாது என்று கூறியிருப்பது கண்டனத்திற்கு உரியது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்