கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் மூடப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று 4-வது நாளாக மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவற்படை, இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.