பிரதமர் மோடிக்கு சரியான அறிவியல் ஆலோசகர்கள் தேவை - விஞ்ஞானி கேள்வி
திங்கள், 11 ஜனவரி 2016 (10:53 IST)
தற்போது பிரதமர் மோடிக்கு சரியான அறிவியல் ஆலோசகர்கள் தேவை என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சி.என்.ஆர்.ராவ் இந்தியாவில் பல பிரதமர்களுக்கு அறிவியல் ஆலோசகராக பணியாற்றி ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். சிறந்த அறிவியலாளருக்கான பாரத ரத்னா விருது பெற்றவர். பெங்களூரில் மோடியின் அறிவியல் கொள்கை மற்றும் மதம், சகிப்பின்மை குறித்து பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய சி.என்.ஆர்.ராவ், ”தனி நபர் ஒருவரோ அல்லது அமைச்சகத்தில் உள்ள எந்த ஒருவரோ தனியாக அறிவியலின் அல்லது சமூகத்தின் பிரச்சனைகளை தீர்த்துவிட முடியாது. அறிவியலைப் பயன்படுத்தி உலக நாடுகளுடன் போட்டியிட்டு கொண்டே வறுமை போன்ற கடினமான பிரச்சனைகளை தீர்க்கலாம்.
தற்போது பிரதமர் மோடிக்கு சரியான அறிவியல் ஆலோசகர்கள் தேவை. அப்போதே முதன்மையான பிரச்சனை எது என்பதை அறிய முடியும். அறிவியலுக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட சிறிய அளவு நிதியான ரூ.10-20 கோடிகளும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
மோடி அரசு நல்ல ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச நிதியாவது ஒதுக்க வேண்டும். மோடி அரசு சில பிரச்சனைகளுக்கென தனியான அறிவியல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தரமான விதைகளை உருவாக்கவும், பாதுகாப்பான குடிநீருக்காகவும், கல்வியின்மையை ஒழிக்கவும் மலேரியா போன்ற நோய்களை ஒழிக்கவும் அறிவியல் திட்டங்களை உருவாக்கி நிதி ஒதுக்க வேண்டும்.
மோடி அரசுக்கு தேவைப்பட்டால் நான் பணிபுரியத் தயார். அறிவியல்தான் அனைத்திற்கும் அடித்தளமாகும். அறிவியல் வளர்ச்சி இன்றியோ உயர் கல்வியின் வளர்ச்சியின்றியோ இந்தியா எப்படி உலகிற்கு தலைமையை அளிக்க முடியும்? நான் அற்புதங்களில் நம்பிக்கை வைப்பவன் அல்ல.
ஒரு விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவில் மதம், நம்பிக்கை, மூட நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது நடக்கிறது. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறியது போன்று, யாரும் நம்பிக்கைகள் இன்றி இருக்க முடியாது. நீங்கள் ஏதாவது மதத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் அதை வாழ்க்கையின் பிற விசயங்களோடு இணைத்துக் கொள்ளக் கூடாது. இயற்பியல் விதிகளுக்கு மாறாக நடக்கும் விசயங்களை நம்பக்கூடாது. அந்த வகையில் அறிவியலையும் மதத்தையும் ஒன்றாக கலக்கக்கூடாது” என்றார்.