வாரணாசி கலாட்டா: நரேந்திர மோடியை எதிர்த்து ஒசாமா பின்லேடன் போட்டி

வீரமணி பன்னீர்செல்வம்

ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (15:09 IST)
பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை போலவே தோற்றமளிக்கும் ஒருவர் வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
 
ஆறடி உயரம், மார்பு வரை வளர்ந்த நீண்ட தாடி என ஒசாமாவைப் போலவே ஜாடை உள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த மெராஜ் காலித் நூர் என்ற பெயருள்ள இவர், தன்னுடைய உருவ அமைப்பை பயன்படுத்தி இதற்கு முன்னர், ராம்விலாஸ் பஸ்வான், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரின் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
 
தற்போது மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள இவர், "இதற்கு முன்னர், ராம்விலாஸ் பஸ்வானும், லல்லு பிரசாத் யாதவ்வும் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக என்னை பயன்படுத்திக் கொண்டனர்.
 
இந்து-முஸ்லிம் மக்களிடையிலான ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் பிரிவினைவாத சக்திகள் வாரணாசியில் வேரூன்றுவதை தடுக்கவே மோடியை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன்." என்று கூறும் நூர், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 'ராம் இந்தியா' என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்.
 
அந்த இயக்கத்தின் சார்பில் வாரணாசி தொகுதியில் களமிறங்கும் இவர் வரும் 23 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்