ஒடிசாவில் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் இறுதி போட்டிக்கு தேர்வாகாத நிலையில் காட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாபில் உள்ள மகளிர் கிரிக்கெட் அணியில் வீராங்கனையாக இருந்து வந்தவர் ராஜஸ்ரீ ஸ்வெயின். புதுச்சேரியில் நடைபெற உள்ள தேசிய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சி பட்டியலில் இருந்த 25 வீராங்கனைகளில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
ஆனால் இறுதி பட்டியலில் இவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் கடந்த 11ம் தேதி டாங்கி பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சியில் ராஜஸ்ரீ கலந்து கொண்டுள்ளார். அப்போது தனது தந்தையை பார்க்க செல்வதாக சொல்லி சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
இதனால் அவரது அணி பயிற்சியாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீஸார் ராஜஸ்ரீயை தீவிரமாக தேடிய நிலையில் கட்டாக் நகர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மரம் ஒன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவரது ஸ்கூட்டர் வனப்பகுதியில் மீட்கப்பட்ட நிலையில், செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆக இருந்துள்ளது. இதுகுறித்து குருதிஜியா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்ரீ உடலின் சில பகுதிகளில் காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகமடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.