தேர்தல் ஆணையம் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணியை தகுதி நீக்கம் செய்யுமா?

திங்கள், 12 மே 2014 (18:57 IST)
அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணிக்கு ஆதரவாக மோடி பங்கேற்ற பிரச்சாரம் மற்றும் பேரணிக்காக விதியை மீறி ரூ.70 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இதனால் ஸ்மிருதி ராணி தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 5 ஆம் தேதி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டம் மற்றும் பேரணியும் நடத்தப்பட்டது.
 
நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்யும் பொதுக் கூட்டங்களில் வேட்பாளர்களின் பெயர் இடம் பெற்றாலோ, அதில் வேட்பாளர்கள் பங்கு பெற்றாலோ முழு செலவு வேட்பாளர்களின் செலவு கணக்கிலேயே சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஸ்மிருதிக்காக மோடி பிரச்சாரம் செய்தபோது பெருமளவில் பணம் செலவு செய்ததாக தேர்தல் ஆணையம் கண்டு பிடித்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று விதி உள்ளது. ஆனால் மோடி பங்கேற்ற பிரச்சாரம் மற்றும் பேரணிக்காக ரூ.70 லட்சத்துக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் செலவு கண்காணிப்பு அதிகாரி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதி 77, 78 ஆகியவற்றை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி மீறியுள்ளார். தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடும் மீறப்பட்டுள்ளது என்ற மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
இதன் காரணமாக ஸ்மிருதி ராணி தகுதி இழக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட தொகுதிக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்தால் அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
 
தற்போது இவரது செலவு கணக்கு பற்றிய தகவல் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இதுகுறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்