200 மாவட்டங்களில் பெண்கள் - குழந்தைகளுக்கான பல்முனை ஊட்டச் சத்துத் திட்டம்
வெள்ளி, 25 ஜூலை 2014 (18:28 IST)
நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் பெண்கள், குழந்தைகள், வளரினம் பெண்கள் ஆகியோருக்கான பல்முனை ஊட்டச்சத்து திட்டம் செயல் படுத்தப்படும் என்று மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் சோகை நோய் பாதிப்புக்குள்ளான இளம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பெண்கள் ஆகியோருக்கான இந்த ஊட்டச் சத்து திட்டம் 200 மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 12ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் எடை குறைவு, சோகை நோய் ஆகிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமானவராக மாற்றுவதற்கு இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில ஊட்டச் சத்துக் குழு மற்றும் மாவட்ட ஊட்டச் சத்துப் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஊட்டச் சத்துக்கான செயல்திட்ட அறிக்கையை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்து ஒப்புதலைப் பெறுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. மத்திய அரசு ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்குவதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் வளர்இளம் பெண்களுக்கும் கருவுற்ற பெண்கள், பாலுட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தபடுகிறது.
மத்திய அரசு ஏற்கனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள், சபலா எனப்படும் ராஜீவ் காந்தி வளர் இளம் பெண்களுக்கான அதிகாரம் அளிக்கும் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மேலும், இவர்களிடையே ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் தேசிய அளவிலான தகவல் மையங்கள், கல்வி சமூகங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருமதி மேனகா சஞ்சய் காந்தி மக்களவையில் 2014 ஜூலை 25 அன்று தெரிவித்துள்ளார்.