பாஜக ஆட்சி அமைய பகுஜன் சமாஜ் ஒருபோதும் ஆதரவளிக்காது - மாயாவதி திட்டவட்டம்

வெள்ளி, 9 மே 2014 (17:03 IST)
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைவதற்கு, பகுஜன் சமாஜ் ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
 
"தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு நேற்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் ஒருவேளை கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதியின் ஆதரவை நாடுவேன் என்று கூறியுள்ளார்.
 
எனக்கு மற்ற கட்சிகளின் நிலைபாடு என்ன என்று தெரியாது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்காது" என்று கூறினார்.
 
முன்னதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அளித்த நேர்காணலின்போது, மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் பாஜக வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்குமா என்று கேட்டதற்கு, "மக்களவைத் தேர்தலுக்கு பின் பாஜக யாரிடமும் ஆதரவு கோர வேண்டிய நிலை வராது. ஒருவேளை பெரும்பான்மையின்றி வெற்றி பெற்றால், அதிமுக, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதன் தலைவர்களிடம் பாஜக ஆதரவு கோரும்" என்று மோடி கூறியது கவனிக்கத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்